தருமபுரி மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் தருமபுரி மாவட்டத்தில் சென்ற ஆண்டு வழக்கத்தைவிட 59 சதவீதம் மழைப் பொழிவு குறைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரையும், விவசாயத்திற்கும் விவசாயிகள் தண்ணீரைய விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த மாவடிபட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சியின் காரணமாக காய்ந்துபோன தென்னை மரங்களை காப்பாற்ற தண்ணீரை வெளிப்பகுதியில் இருந்து வாங்கி மரங்களை காப்பாற்றி வருகின்றனர்.
மாங்காய் சாகுபடி செய்த விவசாயிகள் சுமார் இரண்டு ஏக்கர் மா செடிகளை காப்பாற்ற ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈச்சம்பாடி அணை பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீரை டிராக்டர் மூலம் வாங்கி வந்து செடிகளுக்கு பாய்ச்சுகின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ஆறு ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இப்பகுதி விவசாயிகளுக்கு ஈச்சம்பாடி அணையிலிருந்து நீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி தண்ணீரை கொண்டு வந்து அருகில் உள்ள ஏரிகளில் நிரப்பினால் இப்பகுதி விவசாயிகள் பாசன வசதி பெறுவார்கள். இதன் மூலம் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு மறைமுகமாகவும் பயன்பெறும்.
தண்ணீரை விலை கொடுத்து வாங்கி மா செடிகளை காப்பாற்றும் விவசாயிகள்! மேலும் ஏரிகளில் தண்ணீர் கொண்டு நிரப்பும்போது நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றும் இங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி மனு அளித்துள்ளனர்.
தற்போது ஈச்சம்பாடி அணையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீர், குழாய்கள் மூலம் நீர் ஏற்றம் செய்தால் அந்த தண்ணீர் காய்ந்து வீணாகும் விவசாய நிலங்களை காப்பாற்ற உதவும். இதனால் அரசு இதற்கு நடவடிக்கை எடுத்து நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.