தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தருமபுரி அடுத்த முத்தம்பட்டி அருகே உள்ள சிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பழனிசாமி என்பவருக்கு கடந்த 30 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவசர ஊரதி மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு மேலும் அவருக்கு திடீரென மூச்சுத் தினறல் ஏற்பட்டு அவதிக்குள்ளானதாகவும், அதனையடுத்து அவரது மகன் இரவு நேர பணியில் இருந்த மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க கேட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அந்த மருத்துவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் வர மறுத்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் ஒரு செவிலி மற்றும் உதவியாளர் வந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்து, சிகிச்சைப் பலனளிக்காமல் பழனிசாமி உயிரிழந்ததாகவும், தனது தந்தை உயிரிழந்த விரக்தியில் பழனிசாமியின் மகன் மருத்துவர் உறங்கி கொண்டிருந்ததையும், அவசர சிகிச்சைப் பிரிவில் இரவு பணியில் யாரும் இல்லாததையும் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
மேலும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளும் இருந்தும் பணம் வசதி இல்லாத ஏழை எளிய பொதுமக்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியபடுத்தும், இந்த செயல் தொடர்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இது தவறான தகவல் என மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “தருமபுரி அரசு மருத்துவக் கல்லலூரி மருத்துவமனையில் பழனிசாமி (65ல்) நெஞ்சு வலியுடன் 30.04.2023 அன்று காலை 06.30 மணிக்கு தீவிர இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ECG எடுத்து பார்த்ததில், அவருக்கு இருதய இரத்தக் குழாய்களில் அதி தீவிரமான அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது.
பின் காலை 06:40 மணிக்கு அவரது இருதய இரத்த குழாய்களை சரி செய்யும் அதிநவீன மருந்து செலுத்தும் போதே அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு இருதயம் செயலிழந்தது, இதயத்துடிப்பு இல்லை, மருத்துவர்களின் அதி தீவிர முயற்சியால் CPR (Cardio Pulmonary Resuscitation) கொடுக்கப்பட்டு அவருக்கு இதயத்துடிப்பு மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால் அவரது மூளை செயல்பாடு மற்றும் ரத்த ஓட்டங்கள் சீராக இல்லை, அதற்காக மருந்துகளும் தொடங்கப்பட்டது.
இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். எனினும் 01.05.2023 பின்னிரவு 01.45 மணிக்கு அவருக்கு இருதயம் மீண்டும் செயலிழந்தது, மறுபடியும் CPR கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. நோயாளி இறக்கும் வரை மருத்துவர்களும் மற்றும் செவிலியர்களும் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்தனர்.
அவர் இறந்த பிறகு 1.5.2023 பின்னிரவு 2.15 மணிக்கு நோயாளிகளின் உறவினர்களிடம் மருத்துவர் இறப்பை அறிவித்தார். அவரது இறப்பை தெரிவித்த பிறகு, அவரது உறவினர் தகாத மற்றும் தரக்குறைவான வார்த்தைகளால் மருத்துரை திட்டியதால் மருத்துவர் தீவிர சிகிச்சையில் உள்ள மற்ற நோயாளிகளை பார்க்கச் சென்றுவிட்டார்.
ஆனால் அதை ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் அவரது உறவினர்கள் பரவ விட்டுள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளோம். மேலும் வருங்காலத்தில் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் ஜமாத் தலைவருக்கு பார்சலில் மண்டை ஓடு.. இளைஞர் பகீர் வாக்குமூலம்!