தர்மபுரிமாவட்டத்தில் பாலக்கோடு, காரியமங்கலன் உள்ளிட்டப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மீன் பண்ணைகளில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை விற்பனை செய்வதாகவும்; அவற்றைப் பல வெளி மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்வதாகவும் குற்றம்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை வருவாய்த்துறையினர், தமிழ்நாடு மீன்வளத்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக தடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆப்பிரிக்க கெளுத்தி வகை மீன்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகும். இந்த மீன்கள் தன்னுடன் வாழும் மற்ற வகை மீன்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் திறன் கொண்டவை.
இவ்வாறு தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை சிலர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மீன் பண்ணைகளில் வளர்த்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இது குறித்து அலுவலர்களுக்குப் புகார் தெரிவித்தும் மீன் பண்ணையாளர்களுக்குச் சாதகமாக வருவாய்த்துறை அலுவலர்கள் செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு தடை செய்யப்பட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை முழுமையாக இப்பகுதியில் அழிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் தர்மபுரி மாவட்ட ஆட்சியா் சாந்தி செய்திக்குறிப்பு மூலம் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்கக்கூடாது என அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் தர்மபுரியில் வளர்ப்பு - கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள் இதையும் படிங்க: ரப்பர் தோட்டத்தொழிலாளர்களை அச்சுறுத்திய 13 அடி நீள அரியவகை ராஜநாகம் - உயிருடன் பிடித்த வனத்துறையினர்