கரோனா பெரும் தொற்று உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், அதற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்களும், செவிலியரும் பெரும் சேவையை ஆற்றிவருகின்றனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்களுக்கு செயற்கையாக ஆக்சிஜன் சுவாசம் அளிக்கப்பட்டுவருகிறது.
தற்போது மத்திய, மாநில அரசுகள் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்கியுள்ளன.
இருந்தபோதிலும் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும், இயற்கையாகவே ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்திசெய்யும் மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில், குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கு அரசு மருத்துவர்கள், பணியாளர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை அளித்து, அதை முறையாக நட்டு பராமரிக்குமாறு அறிவுறுத்தி, கைதட்டி மகிழ்ச்சியுடன் வழியனுப்பிவைக்கின்றனர்.
கோவிட் பெரும் தொற்றில் பரிசோதனைகள் தொடங்கி, ஆலோசனைகள், சிகிச்சைகள், தடுப்பூசி செலுத்தும் நிகழ்வுகள் என்ப் பல்வேறு சேவை புரியும் அரசு மருத்துவர்களும், செவிலியரும், மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களும் தற்போது இயற்கைச் சூழலை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை வழங்கிவருவது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
நிகழ்வில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் ஜெமினி, பொறுப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் ஸ்ரீகாந்த், கட்டுப்பாட்டு அறை மருத்துவ அலுவலர் மருத்துவர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.