கரோனா தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதை அடுத்து சொந்த ஊருக்குத் திரும்பும் மக்களை மாவட்ட எல்லையில் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்ட எல்லை பகுதியில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனையடுத்து மாவட்டத்திற்கு வரும் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களைச் சார்ந்த நபர்கள் முறையாக இ பாஸ் பெற்று வருகிறார்களா என்பதை கண்காணிக்க 24 மணி நேரம் செயல்படும் சோதனை சாவடிகள், மாவட்ட எல்லையான காரிமங்கலம், தொப்பூர், நரிப்பள்ளி போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து இ பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் வந்த 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இன்று முதல் ஜூலை 22ஆம் தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
இதனையடுத்து மாவட்ட எல்லையான காரிமங்கலம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்டோர் நேரடியாக ஆய்வு செய்தனர்.
தருமபுரியில் இருந்தும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வேலைக்கு சென்ற நபர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவருகின்றனர். அவ்வாறு திரும்பி வருபவர்களை கண்காணிக்கும் விதமாக மாவட்ட எல்லையில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.