சலூன் கடைக்கு குப்பைகளை கொட்டி அச்சுறுத்தல்? என ஆட்சியரிடம் புகார் தருமபுரி:சலூன் கடை முன்பு குப்பைத்தொட்டிகள் வைத்து நிலத்தை அபகரிக்க முயலும் பாஜக மாவட்ட துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 10) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த மானியதள்ளி கிராமத்தில் வசித்து வரும் ராஜசேகர் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தனது தந்தை காலத்திலிருந்தே 36 ஆண்டுகளாக இந்த சலூன் கடையை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மானியதள்ளி ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக மாவட்ட துணைத் தலைவருமான சிவசக்தி என்பவர் சலூன் கடையினை திறக்காதவாறு கடை முன்னர் குப்பைத்தொட்டிகளை வைத்து, கொலை மிரட்டல் விடுத்து அராஜகம் செய்வதாகவும், வாழ்வாதாரமாக உள்ள தங்களது கடையினை மீட்டு தரவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் இன்று (ஜூலை 10) ராஜசேகரின் குடும்பத்தினர் மனு அளித்துள்ளார்.
அப்போது பேசிய ராஜசேகர் 'பண பலம், ஆட்கள் பலம் கொண்ட பாஜக நிர்வாகியான சிவசக்தியினை எதிர்த்து போராட முடியாமல், இது குறித்து தொப்பூர் காவல்நிலையத்தில் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தொடர்ந்து சிவசக்தி ஆகவே மாவட்ட ஆட்சியரும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களும் தங்களை காப்பாற்ற வேண்டும் எனவும், வாழ்வாதாரமாக இருந்து வரும் கடையினை மீட்டுத்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஈடிவி பாரத் சார்பில் மானியதள்ளி பஞ்சாயத்து தலைவர் சிவசக்தியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'நீங்கள் வேண்டுமெனில், நேரில் பார்த்துக் கொள்ளுங்கள். தவறு யார் செய்தார்கள்? என நீங்கள் சொல்லுங்கள். என் மீது த்வறு இருந்தால், நான் திருத்திக்கொள்கிறேன். அவர்கள் மீது தவறு இருந்தால் திருந்திக்கொள்ள சொல்லுங்கள் என்றார். ஒரு கடை உரிமையாளர் வெளியூர் இருந்து இங்கு கடை வாங்கி கடை நடத்தி வருகிறார்.
கடைக்கு முன்பாக சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதை அகற்ற சொன்னால் ரூல்ஸ் பேசுகிறார்கள். மற்றொரு இடத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை 7 அடி ஆக்கிரமித்து இருக்கிறார்கள். மானியதள்ளி பஞ்சாயத்தில் உள்ள பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை தானாகவே முன்வந்து அகற்றிக் கொண்டார்கள். இவர்கள் மட்டும்தான் பிரச்னை செய்கிறார்கள்.
ஊரில் 20,000 மக்கள் இருக்கிறார்கள் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு போலீஸின் உதவியோ, வட்டார வளர்ச்சி அலுவலரின் உதவியோ எந்த உதவியும் இல்லாமல் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றியுள்ளோம். இதன் பின்னர், சாக்கடை கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. நான் காசு கொடுத்து ஓட்டு வாங்கவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர். அவர்களுக்கு மாற்று இடம் இல்லை என்று தெரிவித்தால் அவர்களுக்கு இடம் வழங்கவும், வீடு கட்டப் பணம் இல்லை என்றால் வீடு கட்டித் தரவும் நான் தயார்' என்று பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: மைசூரு மகாராஜா வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்த விஏஓ குடும்பம்.. நிலத்தை மீட்கும் பணியில் அறநிலையத்துறை!