விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாள்களே உள்ளன. இதையொட்டி, கற்பனைக்கும் எட்டாத வகையில் வண்ண அலங்காரத்துடன் பளபளக்கும் சிலைகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. கெமிக்கல் பூசப்பட்ட நிறங்களால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் கண்களை கவர்ந்தாலும், அதனால் ஏற்படும் மாசை யாரும் கவனிப்பதில்லை.
அதுபோன்ற விநாயகர் சிலைகளை ஆட்டம் பாட்டத்துடன் ஆறு, குளம், குட்டைகள் ஏரிகளில் கரைத்து விட்டு, அடுத்த வேலையை நோக்கி செல்கின்றனர். ஆனால், தற்போது நிலவி வரும் பொது முடக்கத்தால் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, வழக்கமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, இந்த ஆண்டு உற்சாகம் குறைந்து காணப்படுகிறது. இதுபோன்ற சூழலில் விநாயகர் சிலை விற்பனையாவது மிகவும் கடினம் தான்.
இதனை சவாலாகவே ஏற்று தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் விநாயகர் சிலையை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரி பகுதியில் மூன்று பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து கடந்த நான்கு ஆண்டுகளாக களிமண்ணால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆன்லைன் மூலம் வெளிநாட்டிற்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
களிமண்ணில் விதை விநாயகர்:
எதிர்கால தலைமுறையைக் கருத்தில் கொண்டு, களிமண்ணோடு காய்கறி, கீரை மற்றும் வேம்பு விதைகள் போன்றவற்றை சேர்த்து விநாயகர் சிலையை வடிவமைக்கின்றனர். இதில், செயற்கை சாயங்கள் எதுவும் கலக்காமல் களிமண்ணால் அழகுபடுத்துகின்றனர். ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் விலை நூறு ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.