தர்மபுரி:முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்துவது வழக்கம்.
ஊரடங்கில் சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி:
இந்த ஆண்டும் ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி இளைஞர்களுக்காக அறிவிக்கப்பட்டு, பந்தல் அமைத்து ஒரே இடத்தில் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டிக்காக விழா குழுவினர் சார்பில் 15 கிலோ சிக்கன் பொரித்து போட்டியில் கலந்து கொண்ட 15 இளைஞர்களை ஒரு டேபிளுக்கு 3 பேர் என சமூக இடைவெளியில் உட்கார வைத்து, ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டியை நடத்தினர்.
அதேபோல் குறிப்பிட்ட நேரத்தில் அதிகளவு பிரியாணி சாப்பிடும் போட்டியும் நடந்தது. இந்தப் போட்டியில் 21 இளைஞர்கள் கலந்து கொண்டு சில்லி சிக்கன் மற்றும் பிரியாணியை உற்சாகமாக சாப்பிட்டனர். பொங்கல் பண்டிகையில் வித்தியாசமான போட்டி என்பதால், ஏராளமான மக்கள் போட்டியைக் கண்டு ரசித்தனர்.
40 பேர் மீது வழக்கு:
1 கிலோ சிக்கன் சாப்பிடும் போட்டி : ஊரடங்கு காலத்தில் போட்டி நடத்திய 40 பேர் மீது வழக்கு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஞாயிறு முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், கரோனா விதியை மீறி போட்டி நடத்தப்பட்டது குறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்திற்குச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
ஞாயிறு ஊரடங்குத் தடையை மீறி, போட்டி நடத்தியதற்காகவும், நோய்த்தொற்று எளிமையாகப் பரவும் வகையில் கூட்டத்தை கூட்டியதற்காகவும், விழா நடத்தியவர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் என மொத்தம் 40 பேர் மீது அதியமான்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தகுந்த இடைவெளியோடு மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்