தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை இந்நிலையில், பாண்டிச்சேரி பாரிஸ் நகரில் வசித்து வரும் மனோ(58), தனது மனைவி அஞ்சலாட்சி (51), மகள் மோசிகா (27) ஆகியோருடன் அண்மையில் ஒகேனக்கல் சென்றுள்ளார். ஒகேனக்கலில் தங்கிய அவர்கள் பரிசலில் செல்ல விரும்பியதால், ஒகேனக்கல் ஊட்ட மலையை சேர்ந்த பரிசல் ஓட்டி மனோகரன் (37) என்பவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்பு, அங்கிருந்து ஒகேனக்கல் நோக்கி பரிசலை இயக்கியுள்ளனர். இந்த பரிசலில் மனோ, அவரது மனைவி அஞ்சலாட்சி, அவரது மகள் மோஷிகா, கார் ஓட்டுநர் கந்தன் உள்ளிட்ட நான்கு பேர் சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில் நீலகிரி பிளேட் என்ற இடத்தில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பரிசலில் பயணம் செய்த அஞ்சலாட்சி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். பரிசலில் பயணம் செய்த மனோ, அவரது மகள் மோஷிகா, கார் ஓட்டுநர் கந்தன் ஆகியோர் மரக்கிளைகளை பிடித்து ஆற்றில் தத்தளித்த நிலையில், பரிசல் ஓட்டி மனோகரன் அவர்களை மீட்டு கரை சேர்த்தார்.
இதுகுறித்து, தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அஞ்சலாட்சியை தேடி வருகின்றனர். மேலும், ஒகேனக்கலில் தடையை மீறி பரிசல் இயக்கியதால் பரிசல் ஓட்டி மனோகரனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.