இதுதொடர்பாக தர்மபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும்போது 69 விழுக்காடு இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகும் என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இதைக் கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மாணவர்களின் நலனில் அக்கறையோடு உயர் சிறப்பு அங்கீகாரம் தேவையில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. அதே சமயம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால் எது போன்ற கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுமோ? அதைத் தமிழ்நாடு அரசு தனது நிதியைக் கொண்டு நிறைவேற்றும்.
ஆராய்ச்சி படிப்புகளுக்கு அதிக கவனம் செலுத்துகின்ற வகையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும். அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த பிரிவிலும், பொறியியல் பிரிவிலும் தற்போது நல்ல நிலையில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத்தியதற்கு மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நான்கு மண்டல மையங்கள் மற்றும் 13 உறுப்புக் கல்லூரிகளை உள்ளடக்கியது. உயர் சிறப்பு அங்கீகாரத்திற்கு 13 உறுப்பு கல்லூரிகளை விடுத்து நான்கு மண்டல மையங்களை மட்டுமே பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக, 13 உறுப்பு கல்லூரிகளின் தரம் பாதிக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழத்தின் உறுப்புக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் விழுக்காடு 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிக்கைப்படி இந்தியளவில் உயர்கல்வி பயில்வோர் 26.3 விழுக்காடு. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டே உயர்கல்வி பயில்வோர் விழுக்காடு 49 ஆக உயர்ந்துள்ளது. இந்தாண்டு 50 விழுக்காடு எட்டும். இந்தியாவிலேயே பள்ளிக்கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவருகிறது.
உயர் கல்வித் துறையில் மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 92 புதிய அரசு கல்லூரிகள், 1,666 புதிய பாடப் பிரிவுகளையும் மாநில அரசு தோற்றுவித்துள்ளது. தமிழ்நாடு அரசு அறிஞர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்க எவ்வளவு நிதியையும் செலவிடும். ஐ.இ.ஓ நடைமுறைப்படுத்தப்பட்டால் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு பங்கம் வரும்.
மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு வரும். வெளிமாநிலத்தவர் அதிகப்படியாக சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டு மாணவர்களின் நிலைமை பறிபோகும். இச்சூழ்நிலை வருவதால் அதற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்காது. துணைவேந்தரின் நடவடிக்கை சரியில்லை என்றால் ஆளுநரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
பல்கலைக் கழகம் என்பது அரசுக்கு உட்பட்டது. மாநில நிதியை ஒதுக்கி வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளது. மாநில அரசுக்கு உட்பட்டது. ஐ.இ.ஓ.100 விழுக்காடு தேவையில்லை. ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக உள்ளது" என்றார்.