தர்மபுரி:பொம்மிடி என்னும் ஊரில் பாமக கிழக்கு மாவட்டச்செயலாளர் செந்தில் என்பவரின் மகள் திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி எம்.பி. கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டில் நீர் மேலாண்மையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் இந்த ஆண்டு 450 டி.எம்.சி தண்ணீர் உபரியாக சென்றுள்ளது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்புவதற்கு மூன்று டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தேவை. அதேபோல் தென்பெண்ணையாற்றில் ஆண்டுக்கு 5 முறை வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எனவே, இந்த தென்பெண்ணை, காவிரி உபரி நீர் திட்டங்களை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நீர் மேலாண்மையை நிறைவேற்றுவதற்கு ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும். இதற்கு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளட்டும். இதற்கு ஆண்டுக்கு 20ஆயிரம் கோடி ரூபாயை நீர் மேலாண்மைக்கு மட்டும், முதலமைச்சர் ஒதுக்கித்தர வேண்டும்.
திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு, தேர்தலைச் சந்திக்கும்போது தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சி அமைத்தால், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன. இதுவரை அந்த தேர்தல் வாக்குறுதியை, சட்டமாக இயற்றவில்லை. எனவே, உடனடியாக அதை புதிய சட்டமாக நிறைவேற்றி, அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.