தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் பாமக கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நடை பயணத்தின் மூலம், காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறார். இந்த நடைப்பயணத்தை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் அன்புமணி தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி மூன்று நாள் நடைபயணத்தை தற்போது ஒகேனக்கலில் தொடங்கி இருக்கிறேன். தமிழ்நாட்டிலேயே தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். இங்குள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்து, போதிய வேலைவாய்ப்பின்றி, தொழில் வாய்ப்பின்றி, போதுமான குடிநீர் வசதி இன்றி உள்ளனர்.
மேலும் இந்த மாவட்டத்தின் நிலத்தடிநீரில் புளோரோசிஸ் என்னும் நச்சுப்பொருள் கலந்துள்ளதால், இங்குள்ள மக்கள் உடல்நலம் மற்றும் மனநலத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், மாவட்டத்தில் வாழும் சூழலின்றி சுமார் நான்கு லட்சம் பேர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.
இதுதான் ஒரே தீர்வு: இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்ப வேண்டும். வெள்ளப்பெருக்கு காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் உபரி நீரில் சுமார் மூன்று டிஎம்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
கடந்த 35 நாட்களில் காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமார் 2.5 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் சென்றுள்ளது. சுமார் 161 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. மூன்று டிஎம்சி தண்ணீரை மட்டுமே காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் நீரேற்று முறையில் எடுத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்பினால் மாவட்டத்தில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் இது தீர்வாக அமையும்.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் 700 முதல் 1,000 அடியில் தான் உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றிய பின், 50 முதல் 60 அடியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது தென்மேற்கு பருவமழை காலத்திலும் அடுத்து வரும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் சேர்த்து காவிரி ஆற்றில் சுமார் 200 டிஎம்சி தண்ணீருக்கு மேல் வீணாக கடலில் கலக்கப்போகிறது.