தருமபுரி: தருமபுரி அதியமான் கிரிக்கெட் கிளப் சார்பில் ஏ.எம்.ஆர் கிரிக்கெட் போட்டி கடந்த 15 தினங்களாகத் தருமபுரியில் நடைபெற்றது . ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணிகளின் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இறுதிப் போட்டியை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோடை விடுமுறைக் காலத்தில் இளைஞர்கள் திசை மாறிப் போகக்கூடாது என்பதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதேப் போல் மற்ற போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்திற்குக் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சுமார் 620 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றினால் நீராதாரம் பெருகும், வேலை வாய்ப்பு உருவாகும்.
வெளியூர் வேலைக்குச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள். இந்த திட்டத்தை நிறைவேற்றப் பல போராட்டம் நடத்தப்பட்டது. இதனை நிறைவேற்றப்படும் என உறுதி கூட முதலமைச்சர் சொல்லவில்லை. இதனை அரசியலாகப் பார்க்கிறாரா என தெரியவில்லை. அம்பத்தூர் பகுதியில் 77 மது குடிப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. இது காவல் துறையினருக்குத் தெரியாமல் நடைபெறாது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாகச் சொன்னார்கள். இதைக் கருணாநிதியின் பிறந்த நாளில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். தமிழ்நாட்டில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு தான் மின் கட்டணம் உயர்த்தியது.
தற்போது மீண்டும் மின் கட்டணம் உயர்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவ்வாறு உயர்த்தினால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை பாமக எதிர்த்துப் போராடும். மேகதாது அணைக் கட்டும் முயற்சியைக் கர்நாடக மேற்கொண்டு வருகிறது. இதே நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் தான், அணை கட்ட நிதி ஒதுக்கி, பல அரசியல் செய்தார். அவர்கள் சொல்வதை நாம் நம்பக் கூடாது. கர்நாடகாவில் 4 பெரிய அணைகள் உள்ளது. ஆனால் நமக்கு மேட்டூர் அணை ஒன்று தான் உள்ளது. இந்த அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும். தமிழ்நாடு அதை எதிர்க்கவேண்டும்.