அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி, தருமபுரியில், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளருமான பழனியப்பன் கலந்துகொண்டு, கட்சியினரிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னதாக நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து கட்சி உறுப்பினராக இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளனர், ஆனால் ஒருவர் தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற இந்த நடைமுறை, அதிமுகவில் ஏற்கனவே உள்ளது எனக் கூறினார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் நினைத்தால் சட்டத்திட்டங்களை தளர்த்தி வாய்ப்பு வழங்கலாம் எனவும், இவர்கள் யாரை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் இதுபோன்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.