தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்தது. நேற்று மாலை நடந்த நிறைவு விழாவில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
’ஒகேனக்கல்லுக்கு ஆண்டுக்கு 1 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை!’
தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
பின்னர் விழாவில் 212 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மேடையில் பேசியபோது, "2014ஆம் ஆண்டு முதல் கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.336.18 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒகேனக்கல்லுக்கு ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்" என்றார்.