முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தருமபுரி:தருமபுரியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்துக் கொண்ட அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சா் ஜெயக்குமார் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது பேசிய அவா், “உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அவசரமாக சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டிய காரணம் என்ன?. திமுக என்பது முரண்பாடு உடைய ஒட்டு மொத்த உருவம்.
சட்டத்திற்கு உட்பட வேண்டும்:திமுகவிற்கு ஒத்திசை பாடுகின்ற, ஜால்ரா தட்டுகின்ற எல்லாவற்றுக்கும் தலையாட்டுகின்ற ஆளுநர் தான், நாட்டுக்கு தேவை என்பார்கள். சட்டமன்றத்தில் ஆளுநர் தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். 17 ஆண்டு மத்திய அரசில் ஆட்சியில் இருந்தீர்கள். சர்க்காரியா ஒரு கமிஷனை நியமனம் செய்து மாநிலங்களில் இருந்து கருத்து கேட்டு, ஆளுநருக்கு என்னென்ன அதிகாரம் வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தினார்.
அதை அமல்படுத்தியிருந்தாலே போதும். இப்போது பிரச்சனை வந்திருக்காது. 17 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து விட்டு, அப்பொழுது அமல்படுத்தியிருந்தால் பிரச்சினை இல்லை. ஆளுநருக்கு அரசுக்கும் மோதல் போக்கு உருவாகி இருக்காது. ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பது தான் எழுதப்பட்ட விதி. அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை.
திமுக அரசு கில்லாடிகள்:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1994 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருக்கலாம் என்று சட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால் திமுக அதனை திரும்ப பெற்றது. திமுகவை பொறுத்தவரை மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பது போன்ற நிலைபாட்டை எடுத்து வருகிறது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் தேவைக்கு ஏற்றார் போல் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும்.
அதாவது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு என பச்சோந்தி தனமான முறைகளை கையாள்வதில் ஆளும் விடியா திமுக அரசு கில்லாடிகள்” என்றார். சட்டமன்றத்தில் பூனை குட்டி வெளியே வந்து விட்டது என்று துரைமுருகன் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “திமுக 17 ஆண்டுகள் மத்தியில் இருந்தது.
உரிமையை விற்றவர்கள் பேசலாமா?: அப்பொழுது பூனை குட்டிகள் எல்லாம் என்ன செய்தது. பூனை குட்டிகள் எதுவும் செய்யவில்லை. அதிகாரத்தில் இருக்கும் பொழுது மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்காமல், மாநில உரிமைக்கு குரல் கொடுக்காமல், தனது குடும்ப நலன்களுக்காக உரிமையை விற்றவர்கள் பேசலாமா? இவர்களைப் போல நாங்கள் இரட்டை வேஷம் போடுவது இல்லை. தனித் தன்மையுடன் தான் இருக்கிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க:"மக்கள் மத்தியில் திமுக செல்வாக்கை இழந்து வருகிறது" - நயினார் நாகேந்திரன்!