தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடிப்பெருக்கின் சிறப்பு என்ன? -  வரலாற்றுத் துறை பேராசிரியரின் சிறப்பு நேர்காணல் - ஆடி 18

தர்மபுரி: ஆடிப்பெருக்கு பண்டிகையின் சிறப்பு குறித்து அரசுக் கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஈடிவி பாரத் செய்திகளிடம் பகிர்ந்துள்ளார்.

prof
prof

By

Published : Aug 2, 2020, 2:38 AM IST

தருமபுரி மாவட்ட மக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு. இந்த நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட மக்களும் காவிரி கரையோரம் உள்ள மக்களும் வெகுவிமர்சையாகக் கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு ஆடிப்பெருக்கு நாளை (ஆகஸ்ட் 2) கொண்டாடப்படவிருக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஆடிப்பெருக்கு விழாவை ரத்து செய்துள்ளது. மேலும் மக்கள் ஒகேனக்கல்லில் நீராடவும் அப்பகுதிக்கு செல்லவும் தடைவிதித்துள்ளது. ஆடிப்பெருக்கு விழா சிறப்பு குறித்து அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஈடிவி பாரத் செய்திகளிடம் சிறப்பு நேர்காணலில் பேசியுள்ளார்.

வரலாற்றுத் துறை பேராசிரியரின் சிறப்பு நேர்காணல்

அதில் அவர், “ஆடிப்பெருக்கு தருமபுரி, சேலம் மாவட்ட மக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகை. சங்க காலத்தில் புனல் நீராடுதல் என்று அழைக்கப்படும். இப்பண்டிகை குறித்து சங்க இலக்கியங்களில் கரிகாலச் சோழனின் மகள் ஆதிமந்தியும், அவரது மருமகன் ஆட்டுநந்தியும் புனல் நீராடுதல் நிகழ்வில் ஆற்றில் அடித்துச் சென்றதாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

ஒகேனக்கல் ஒட்டிய பகுதிகள், சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரை ஒட்டிய நீர்நிலைப் பகுதியிலும் பதினெட்டாம் பெருக்கு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இது மகாபாரதப் போர் முடிந்து 18ஆம் நாள் துரியோதனன் இறந்த நாள் என்றும், அதன் காரணமாக ஆற்றங்கரையில் புனித நீராடுதல் சடங்காகவும் கருதப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் குரும்பன்ஸ் பழங்குடியின மக்கள் மூதாதையர் வழிபாட்டின் நினைவாக இப்பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இச்சமூக மக்கள் ஒகேனக்கல் பகுதி, நீர்நிலைப் பகுதிகளில் சென்று நீராடிவிட்டு ஆற்றிலிருந்து கற்களைக் கொண்டுசென்று மூதாதையர் வழிபாடு நடத்துகின்றனர்.

அரூரை அடுத்த அம்மாபேட்டை, வாணியாறு பகுதிகளில் சென்னம்மா கோவில் என்ற இடத்தில் ஆடு, கோழி பலியிட்டு பூஜை செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பண்டிகை பல நூறு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில், இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக கொண்டாட முடியாத சூழ்நிலையில் மக்கள் உள்ளனர்” என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details