தருமபுரி: அரூர் வட்டத்திற்கு உட்பட்ட எஸ். அம்மாபாளையம் அடுத்த முள்ளிகாடு பகுதியைச் சேர்ந்தவர், விவசாயி பெருமாள். இவருடைய மகள் ஞானசௌந்தர்யா, கோயம்புத்தூரில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது இவருடைய பொதுத்தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு வந்து பங்கேற்றார்.
திருவிழா நடைபெறும் பொழுதே இவர் காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்து இவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்பு காவல் துறையினர் மற்றும் இவருடைய பெற்றோர், உறவினர்கள் என அனைவுரும் கோயம்புத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.
எங்கு தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் சேகரிக்க முடியவில்லை. தன்னுடைய மகள் உயிரோடுதான் யாருடைய பாதுகாப்பிலோ உள்ளார் என எண்ணியிருந்த இவருடைய தந்தை பெருமாளுக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், எஸ். அம்மாபாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் உடல்கள் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் ஒருசில எலும்புக்கூடுகள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.