தருமபுரிநரசியர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். கூலித்தொழிலாளியான இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். ஜெயவேல் தருமபுரியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஜெயவேல் குடும்ப சூழ்நிலை காரணமாக தருமபுரியில் இயங்கி வரும் பெல் ஸ்டார் மைக்ரோ பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
மாதம் 4870 ரூபாய் வீதம் 24 மாத காலத்தில் தவணையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜெயவேல் 20 மாதங்கள் கடனை திருப்பி செலுத்திய நிலையில் மீதம் 4 மாத கடனை திருப்பி செலுத்தாததால் கடந்த 3 மாதமாக மீதமுள்ள தவணை தொகை கட்ட வலியுறுத்தி நிதி நிறுவன ஊழியர்கள் ஜெயவேலின் வீட்டிற்குச் சென்று தொந்தரவு செய்துள்ளனர்.
மேலும், நான்கு மாத தவனை தொகையை வட்டியுடன் சேர்த்து 28 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதனை இன்றே செலுத்த வேண்டும் என ஜெயவேலின் வீட்டிற்கு 2 பெண்கள் உட்பட 5 பேர் கடும் வார்த்தைகளால் பேசி நெருக்கடியை கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடனை நாளை திருப்பி கொடுத்து விடுகிறேன் என ஜெயவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியும் கேட்காமல் தனியார் நிறுவன ஊழியர்கள் இன்றே மீதமுள்ள பணத்தை கட்டியே தீர வேண்டும் என வீட்டு வாசலில் அமர்ந்துள்ளனர்.