பட்டாகத்தியுடன் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி! கடலூர்: சிதம்பரத்தில் இருந்து கடலூருக்கு அன்றாட அரசுப் பேருந்துகள் தவிர தனியார் பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் தனியார் பேருந்து காலையில் ஆலப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அப்பேருந்து மாலை கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்தபோது, அதே பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த 4 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தியுடன் பேருந்தை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அந்த 4 இளைஞர்களும் ஓட்டுநர் பாக்யராஜ், நடத்துநர் அரிகிருஷ்ணன் ஆகிய இருவரையும் தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், தனியார் பேருந்தின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள், அந்த இளைஞர்களை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது எதிரே வந்த பேருந்து கார், வேன் ஆகியவை சாலையிலேயே நிறுத்தப்பட்டதால் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
"எங்க ஊர்ல பஸ் நிக்கலைன்னா... வேற மாதிரி ஆகிவிடும்" என்று ஓட்டுநரையும், நடத்துநரையும் அச்சுறுத்தி விட்டு, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர்கள் குறித்து பேருந்து ஓட்டுநர் பாக்யராஜ் புதுச்சத்திரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புதுச்சத்திரம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
அந்த விசாரணையில், பேருந்தை வழி மறித்து தகராறில் ஈடுபட்டவர்கள் புதுச்சத்திரம் சிவன் கோயில் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (29), பிரகாஷ் (20), சதீஷ் (26) மற்றும் 16 வயதான சிறுவன் ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 4 பேர் மீதும், போலீசார் கொலை மிரட்டல் மற்றும் பேருந்தை சேதப்படுத்துதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விக்னேஷ், பிரகாஷ், சதீஷ் ஆகியோரை கடலூர் மத்திய சிறையிலும், சிறுவனை கடலூரில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்துள்ளனர். தற்பொழுது பட்டாகத்தியுடன் பேருந்தை மறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ஆலப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தாததற்கு விளக்கம் கொடுத்த தனியார் பேருந்து நிர்வாகம், பேருந்து படிக்கட்டுகளில் பொதுமக்கள், இளைஞர்கள் தொங்கியவாறு சென்றால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதால், கூடுதலாக பயணிகளை ஏற்றாமல் காலையில் சென்றதாகவும், அதற்கு சில இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் ஓட்டுநர் மற்றும் நடத்துநரைத் தாக்க முயற்சி செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதே போன்று பலமுறை இளைஞர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், தாங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பயப்படுவதா அல்லது இது போன்ற செயல்படும் இளைஞர்களுக்கு பயப்படுவதா என்று தெரியவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பைக் திருட்டு, தங்கம் கடத்தல், குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தை உள்ளிட்ட சென்னை குற்றச் செய்திகள்!