தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடலூர் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; நாளை ஜோதி தரிசனம்

கடலூர்: வடலூர் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், நாளை ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

vadalur
vadalur

By

Published : Feb 7, 2020, 11:42 PM IST

‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்றேன்” என்று பாடி ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதனைக் காண லட்சக்கணக்கான பத்தர்கள் வடலூருக்கு வருகைதருவர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தைப்பூசப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலை ஐந்து மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. பின்னர் 7.30 மணிக்கு தர்மசாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழி ஆகிய இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

அதன்பின், சத்தியஞானசபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்களை கையில் ஏந்தியபடியும், வள்ளலார் பயன்படுத்திய பொருட்களை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுமந்த படியும் ஊர்வலமாக ஞானசபை கொடிமரம் அருகே வந்தனர்.

இதையடுத்து 10.30 மணிக்கு ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்கிற வள்ளலாரின் பாடலை அங்கு கூடியிருந்தவர்கள் பாடினர். பின்னர் வள்ளலார் எழுதிய கொடி பாடல்களை பாடியபடி கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

நாளை ஜோதி தரிசனம்

விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. காலை ஆறு மணி முதல் ஜோதி தரிசனம் நடைபெறும். அதன் பின்னர் காலை 10 மணி, நண்பகல் ஒரு மணி, இரவு ஏழு மணி, 10 மணி, ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

வடலூர் தைப்பூசம்

இதனைக் காண லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் ஒன்று கூடுவார்கள் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கும்பகோணம், வேலூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவைக் காணவரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தைப்பூசத் திருவிழாவில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details