தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் கள்ள மது பாட்டில்களை பதுக்கிய காவலர் மீது பாய்ந்த நடவடிக்கை! - திருப்பாதிரிப்புலியூர்

கடத்தப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த தலைமைக் காவலர் அதை பதுக்கி வைத்தது உறுதியானதை அடுத்து, காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Transfer of head constable who hoarded confiscated liquor bottles
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கிய தலைமைக் காவலர் இடமாற்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 1:04 PM IST

கடலூர்:நாடு முழுவதும் இன்று (ஜன.01) ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. புத்தாண்டு என்றாலே மது பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மது பிரியர்கள், இந்த ஆண்டு புதுச்சேரிக்கு படையெடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் புதுச்சேரியில் மதுபானங்கள் விலை குறைவாக இருப்பதால், மது பிரியர்களுக்கு வேண்டிய மதுபானங்கள் அனைத்தும் அங்கு மளிவான விலையில் கிடைக்கின்றது. அந்த வகையில், கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மது பிரியர்கள், கடலூர் எல்லையில் உள்ள கன்னி கோயில் பகுதியில் சென்று மதுபானங்களை வாங்கி வருவது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று (டிச.31) புத்தாண்டை முன்னிட்டு வழக்கத்தை விட மது பிரியர்கள் அதிக அளவில் புதுவைப் பகுதியில் இருந்து கடலூர் மாவட்ட பகுதிக்கு மதுபானங்களை வாங்கி வந்தனர். இதனால், நேற்று காலையில் இருந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, 10 ஆட்டோக்களில் மதுபானங்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை விதிமுறைகளை மீறி கொண்டு வந்ததை அறிந்த போலீசார், 10 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து, ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.

அதையடுத்து, நேற்று இரவு முழுவதும் தொடர் சோதனை நடைபெற்ற நிலையில், கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்பொழுது, பேருந்து பயணி ஒருவர் கடத்தி வந்த நான்கு மதுபாட்டில்களை, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய தலைமைக் காவலர் செல்வம் பறிமுதல் செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மது பாட்டில்களும் அங்கேயே கொட்டி அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைமைக் காவலர் செல்வம் மட்டும், தான் பறிமுதல் செய்த நான்கு மது பாட்டில்களையும் கொட்டி அழிக்காமல், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அதனை மறைந்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதனைக் கண்டுபிடித்த சக போலீசார், இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பெயரில் போலீசார் செல்வத்தின் பையை சோதனை செய்தபோது, அதில் நான்கு மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தலைமைக் காவலர் செல்வத்தை ஆயுதப்படைக்கு மாற்றி, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவலர் அதை பதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் சாலையில் நடந்து சென்ற இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. சினிமா பாணியில் நடந்த கொடூர சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details