கடலூர்:பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் சிறப்பு தொகுப்பு (TN Govt Pongal Gift) வழங்குகிறது. இதில் பச்சரிசி, வெள்ளம், முந்திரி பருப்பு, நெய், ஏலக்காய், செங்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் கரும்பு வழங்கப்படாது என அறிவித்தனர்.
இதனைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். மேலும் உயர் நீதிமன்றத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இதனால், செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகள் செங்கரும்பை கொள்முதல் செய்து பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் இணைத்து வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுத்துறை நிர்வாக அதிகாரிகளுடன் இன்று (டிச.28) அவசர ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். அதன் பின், 'இந்த ஆண்டும் வழக்கம்போல், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பையும் இணைத்து வழங்கப்படும்' என அறிவிப்பை வெளியிட்டார்.