கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண் செவிலியர் லதாவை தீட்சிதர் தர்ஷன் என்பவர் தாக்கினார். இதனைத் தொடர்ந்து மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி நேரில் சென்று செவிலியர் லதாவிற்கு ஆறுதல் கூறி, நடந்த சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்வதற்காகக் கோயிலுக்குச் சென்ற செவிலியர் லதாவை தீட்சிதர் ஆபாசமாகப் பேசியுள்ளார். நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தொடர்ந்து வன்முறை செயலில் ஈடுபடுகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட தீட்சிதர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டும், இதுவரை கைது செய்யப்படவில்லை.
சாதாரண மனிதரை விரைவாக கைது செய்யும் காவல்துறை, இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட தீட்சிதரைக் கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது. அர்ச்சகர்கள் என்ற பெயரில் உலாவும் சமூக விரோதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயல் மூலம் சாதி பார்த்து காவல்துறை செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதே சம்பவத்தில் ஈடுபட்டது சாதாரண நபராக இருந்தால் காவல் துறையினர் கை, கால்களை உடைத்திருப்பார்கள். தாக்குதல் தொடர்பான காணொலிக் காட்சிகள் கிடைத்த பிறகும் காவல் துறை தீட்சிதரைக் கைது செய்யவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீட்சிதர் கைது செய்யப்படாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் ஒன்றிணைத்து கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம்' என்றார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தொடர்ந்து பேசிய அவர், 'பெண்களின் பாதுகாப்பைத் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில் சூழ்ச்சியின் காரணமாகத் தீட்சிதர்கள் கையில் சென்றுள்ளது. மக்களின் பணம், பக்தி என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்படுகிறது. கோயில் தீட்சிதர்கள் அர்ச்சகர்கள் என்ற பெயரில் ரவுடித்தனம் செய்கிறார்கள். தீட்சிதர்களைக் கோயிலிலிருந்து வெளியேற்றி விட்டு தமிழ்நாடு அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயிலைக் கொண்டு வரவேண்டும்' என்றார்.