தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“ஹலோ நான் திருடன் பேசுறேன்”.. வடிவேலு பாணியில் பேரம் பேசிய நபர் சிக்கியது எப்படி?

Thief stole a mobile and demanded money: கடலூர் அருகே செல்போனை திருடிச் சென்றது மட்டுமல்லாமல், செல்போன் உரிமையாளருக்கே போன் செய்து அவர்களிடம் பணம் கேட்டு பேரம் பேசிய ஆடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

a thief stole a mobile and demanded money
வடிவேலு பாணியில் பேரம் பேசிய செல்போன் திருடன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 3:33 PM IST

கடலூர் அருகே செல்போனை திருடிச் சென்றது மட்டுமல்லாமல், செல்போன் உரிமையாளருக்கே போன் செய்து அவர்களிடம் பணம் கேட்டு பேரம் பேசிய ஆடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழைப் பெருமாள். இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஏழைப் பெருமாள் மற்றும் அவரது மகன் செல்போனை வீட்டில் ஹாலில் சார்ஜ் போட்டுவிட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இவர்களின் செல்போன் மர்ம நபரால் திருடப்பட்டுள்ளது. அன்று இரவே அதே கிராமத்தில் மேலும் இரண்டு செல்போன்கள் திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருடிச் சென்ற நபர், இரண்டு நாட்கள் கழித்து ஏழைப் பெருமாளின் மனைவி எண்ணிற்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது அந்த நபர், "உங்கள் வீட்டில் செல்போன் காணாமல் போய்விட்டதா?” என கேட்டுள்ளார். அதற்கு ஏழைப் பெருமாளின் மனைவி ‘ஆமாம்’ என்று கூறிய நிலையில், செல்போன் உரிமையாளரை பேசச் சொல்லுங்கள் என கூறிவிட்டு கட் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பலமுறை ஏழைப் பெருமாள் அந்த எண்ணிற்கு போன் அடித்துப் பார்த்தும் எடுக்கவில்லை. ஆனால், இரவு போன் அடித்தபோது அவர் அந்த போனை எடுத்துள்ளார். அப்பொழுது அந்த செல்போனைத் திருடிச் சென்ற நபர், "போனை எடுத்தது நான்தான். எனக்கு திருட்டுதான் தொழில். எது கையில் கிடைத்தாலும் நான் திருடி விடுவேன். அன்று வந்து பார்த்தபோது செல்போன்தான் கிடைத்தது. உங்கள் ஊரில் உள்ள நான்கு செல்போனை நான்தான் திருடினேன்.

நீங்கள் புதிதாக செல்போன் வாங்கினால் ஒவ்வொரு செல்போனுக்கும் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும். அந்த செல்போனை கொடுக்க வேண்டும் என்றால், எனக்கு நீங்கள் 15 ஆயிரம் பணம் கொடுங்கள் நான்கு செல்போனையும் நான் உடனே கொடுத்து விடுகிறேன்.

மேலும் இது பற்றி போலீசாரிடம் செல்லாதீர்கள். அவர்களும் எங்களைப் போன்ற திருடர்கள்தான். போலீசாரிடம் சென்றால் என்னை பிடிப்பார்கள், அடிப்பார்கள் செல்போனை வாங்கிச் சிறையில் போடுவார்கள். நான் மீண்டும் வெளியில் வந்து விடுவேன்" என பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அந்த நபர், "எந்த இடத்தில் வந்து கொடுக்க வேண்டும் என்பதை நான் இரவு 11 மணிக்கு போன் செய்கிறேன் விடிவதற்குள் என்னிடம் சொல்லி விடுங்கள். நான் பகலில் போனை எடுக்க மாட்டேன். இரவில் மட்டுமே போனை எடுப்பேன்" எனக் கூறி கட் செய்துள்ளார்.

இதனை அடுத்து, தனக்கு அழைத்த நபரின் அழைப்பை ஏழைப் பெருமாள் ரெக்கார்ட் செய்த ஆடியோ உடன் சென்று பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது போலீசார் கொடுத்த யோசனையின்படி அந்த நபரிடம் மீண்டும் ஏழைப் பெருமாள் போன் செய்து, "பணம் ரெடி ஆகிவிட்டது வந்து பெற்றுக் கொள்ளுங்கள்" என கூறினார்.

அதற்கு அந்த நபர், "மாளிகை மேடு என்ற கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் வந்து செல்போனை பெற்றுச் செல்ல வேண்டும் தனியாக வர வேண்டும்" என கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, கரும்பு தோட்டத்தைச் சுற்றி போலீசாரை நிற்க வைத்துவிட்டு ஏழைப் பெருமாள் மட்டும் பணத்துடன் அங்கே சென்றுள்ளார். அப்போது அந்த நான்கு செல்போனையும் கையில் கொடுத்த நிலையில் சுற்றி இருந்த போலீசார் செல்போன் திருடிச் சென்ற நபரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

பின்னர், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, அவர் பெயர் அய்யனார் (37) என்பதும், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இவர், செல்போன் திருடி உள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், தொடர்ந்து இது போன்று பல இடங்களில் செல்போனைத் திருடி அவர்களிடமே பேசி மீண்டும் அந்த செல்போனை ஒப்படைத்து பணத்தைப் பெற்றுக் கொள்வதைத் தொழிலாக செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அய்யனாரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஓரமாக நிற்க சொன்னவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்; வெளியான சிசிடிவி.. மாணவர்களுக்கு டிசி..

ABOUT THE AUTHOR

...view details