வீதிகளில் ஆதரவற்று சுற்றித்திரியும் மனநல நோயாளிகளை மீட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒயாசிஸ் கருணா மனநல காப்பகம் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த கலிமுல்லா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்தார்.
பின்னர், அவரை மீட்டு கடலூரில் உள்ள ஒயாசிஸ் நிறுவனம் மூலம், மனநல காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் சுய நினைவு திரும்பியது. இதையடுத்து, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆந்திராவில் இருந்து அவருடைய சகோதரர் வரவழைக்கப்பட்டார். பிறகு, அந்நபரை அவரது குடும்பத்தினருடன் கடலூர் ஆட்சியர் சந்திரசேகர சகா மூரி ஒப்படைத்தார்.