கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பயின்று வந்த மாணவி சந்தேகத்திற்குரிய முறையில் கடந்த ஜூலை 13 அன்று உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற ஆர்பாட்டம், கலவரமாக மாறி பள்ளி முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. காவலர்கள் பலரும் இந்தக் கலவரத்தில் காயமடைந்தனர். தொடர்ந்து, இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, மாணவியின் உடலை அவரின் பெற்றோர் பெற்றுக்கொள்ளக் கோரி காவல் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் உடலை பெற ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் மாணவி ஸ்ரீமதி உடல் இன்று (ஜூலை 23) காலை கள்ளக்குறிச்சி தலைமை அரசு மருத்துவனமனையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாணவியின் சொந்த கிராமமான கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியநெசலூருக்கு பலத்த பாதுகாபுடன் உடல் எடுத்து செல்லப்பட்டது.
மாணவி ஸ்ரீமதி உடல் சொந்த ஊரில் அடக்கம் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே செல்லும் பொழுது மாணவியின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் முன்னால் சென்ற வாகனத்தில் மோதியது. எனினும் பலத்த சேதம் ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவியின் உடலுக்கு ஊர் மக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெரியநெசலூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.