கடலூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து விபத்து கடலூர்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள 650 அரசுப் பேருந்துகளில் குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயங்கின.
இரண்டாவது நாளாக இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தால், குறைவான அளவில் பேருந்துகள் இயங்கின. ஓட்டுநர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அரசுப் பேருந்துகளை தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் இயக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று கடலூரில் காலை 11 மணியளவில் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லக்கூடிய அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: கடலூர் பணிமனையில் இருதரப்பு ஊழியர்கள் இடையே தள்ளுமுள்ளு.. 20 சதவீத பேருந்துகளே இயக்கம்!
அப்போது பேருந்து, அண்ணா பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரின் பின் பக்கம் சேதம் அடைந்தது. இதனையடுத்து, விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தனியார் பேருந்து ஓட்டுநர் அரசுப் பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், விசாரணையில் அரசுப் பேருந்தை இயக்கியது ஓட்டுநர் வெங்கடேசன் என்பதும், அவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் தனியார் பேருந்தை ஓட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டி பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாக, நேற்றிலிருந்து கள்ளக்குறிச்சி பேருந்தை ஓட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து, கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சிதம்பரம் அருகே காதலித்து திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது!