கடந்த மே 3ஆம் தேதி பண்ருட்டி அடுத்த மேல் கவரப்பட்டு பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே விளையாட்டின் போது ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் கலவரமாக மாறியது. இந்த பிரச்னை குறித்து மனு அளிக்க மேல் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு திரண்டனர். விடுதலை சிறுத்தை கட்சி மண்டல அமைப்புச் செயலாளர் திருமாறன் தலைமையில் இவர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா - மனு
கடலூர்: மனு அளிக்க வந்த பொதுமக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர், மனு கொண்டு செல்ல ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி என கூறி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இம்மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.