கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன்(23). இவர் சென்னை பாண்டி பஜாரில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் பிரகதீஸ்வரன் நேற்று மாலை தனது தந்தை கந்தனை தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகத் தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை கந்தன், இது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பிரகதீஸ்வரன் தங்கியிருந்த பாண்டிபஜார் விடுதிக்கு காவல்துறையினர் சென்று விசாரித்த போது அவர் அங்கு இல்லாததை அறிந்துகொண்ட காவல்துறையினர் சைபர் காவல்துறை உதவியுடன் பிரகதீஸ்வரனின் செல்போன் எண்ணை டிராக் செய்தனர்.
அப்போது அவரின் செல்போன் சிக்னல் திருவண்ணாமலையிலிருந்து- விழுப்புரம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் காண்பித்தது.
இதையடுத்து, திருவண்ணாமலை- விழுப்புரம் செல்லக்கூடிய பேருந்துகளில் பிரகதீஸ்வரன் புகைப்படங்களை அனுப்பி காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
பிரகதீஸ்வரனின் செல்போன் டவர் காண்பிக்கும் இடத்தை தந்தை கந்தனிடம் தெரிவித்து வந்ததால், அவர் பேருந்துகளை நிறுத்தித் தேடி வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் அரசூர் அருகே விழுப்புரம் நோக்கி சென்றுகொண்டிருந்ததை பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது பிரகதீஸ்வரன் அதிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து பிரகதீஸ்வரனிடம் விசாரித்த போது கடன் தொல்லை அதிகமானதால் வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு செய்து கொள்ள முயன்றதாகவும், கடந்த 17ஆம் தேதியே திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டதாகவும் பிரகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புகார் அளித்த உடனே துரிதமாகச் செயல்பட்டு தற்கொலை செய்ய இருந்த இளைஞரை கண்டுபிடித்துக் கொடுத்த பாண்டி பஜார் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் சைபர் கிரைம் காவலருக்குக் கந்தன் குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்தனர்.