கடலூர்: கடலூர் அடுத்த பச்சையாங்குப்பம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன்(வயது 35). இவர் கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில் ராமநாதனும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகா (வயது 33) என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்தாண்டு 15.5.2023 அன்று சிதம்பரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரைக்குக் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற போது கார்த்திகா அலையில் சிக்கி இறந்து விட்டதாக உறவினர்களிடம் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
அப்போது தகவல் அறிந்து சென்ற புதுச்சத்திரம் போலீசார் கார்த்திகாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து அடக்கம் செய்துள்ளனர். ஆனால், ராமநாதன் நடவடிக்கையில் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்துள்ளனர். மேலும், அதேபகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணுடன் ராமநாதன் கடந்த சில நாட்களாகப் பழகி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், குழந்தைகளை வீட்டில் விட்டு பாரதி என்பவருடன் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், ராமநாதன் மீது சந்தேகம் வலுத்த நிலையில், போலீசார் உயிரிழந்த கார்த்திகாவின் உடற்கூராய்வு பரிசோதனையை ஆய்வு செய்துள்ளனர். அதில், கார்த்திகாவின் கழுத்து பகுதி உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால், கார்த்திகா மரணம் கொலை என போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமநாதனை தேடி வந்தனர். ஆனால், பாரதியுடன் ராமநாதன் பல்வேறு பகுதிகளில் மாறிமாறி சென்றதால் அவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பாரதியின் கணவர் ராமராஜன் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்து இருவரும் கடைசியாகச் சென்னை திருவள்ளூர் பகுதியில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. சென்னை திருவள்ளூரில் இருவரையும் கைது செய்த போலீசார் ராமநாதன் மற்றும் பாரதியைக் கடலூர் அழைத்துச் சென்று மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது பாரதிக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதுடன் பல அதிர்ச்சியூட்டும் தகவலையும் ராமநாதன் தெரிவித்தார்.
விசாரணையில், மனைவி கார்த்திகா நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாகவும் வீட்டிற்குக் கொடுக்கும் பணத்தைத் தேவையில்லாமல் செலவு செய்து வந்ததோடு மகளிர் குழுக்களிலும் கடன் பெற்று செலவு செய்து வந்ததாலும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திகா உறவினர் வீட்டுக்குக் கோபித்துக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது உறவினர் வீட்டிலிருந்து அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது வலுக்கட்டாயமாகச் சாமியார் பேட்டை கடற்கரைக்கு கார்த்திகா, இரு குழந்தைகள் மற்றும் உறவினர்களோடு சென்றுள்ளார். அப்போது திட்டமிட்டு கார்த்திகாவை அலை வரும் போது காலால் அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடி உல்லாசமாகச் சுற்றித்திரிந்த கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:குடிபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் குளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?