தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அதில், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது குறைகளை எடுத்துரைத்தனர். அதனை ஆட்சியர்களும் அதிகாரிகளும் கேட்டுக்கொண்டு குறைகள் களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
கடலூர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்தனர். இன்று நடைபெற்ற கூட்டத்தில் மட்டும் மொத்தம் 278 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வுசெய்தும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளுக்கு காலம் தாழ்த்தக் கூடாது எனவும் ஆட்சியர் அன்புச்செல்வன், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான தேர்தல், நான்கு பஞ்சாயத்து துணைத் தலைவர்களுக்கான மறு தேர்தல் ஆகியவை வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே மாநிலம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அதன் சோதனை முயற்சியானது பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும், நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
கடலூர், தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியரும் மாவட்ட வருவாய் அலுவலருமான ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், திட்ட இயக்குநர் தனபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கொலைசெய்ய துணிந்த மகன்கள்: தீக்குளிக்க முயன்ற தந்தை...!