கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் வீரா (எ) வீராங்கையன் (30). பிரபல ரவுடியான இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இவர் கடலூர் உழவர் சந்தை அருகில் பழக்கடை நடத்திவந்தார். இந்நிலையில், நேற்று (பிப். 16) இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வீராவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அவரது தலையை வெட்டி தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் தலைமையிலான காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடத்திவந்த தேடுதல் வேட்டையில் நான்கு பேர் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், முக்கியக் குற்றவாளியான கிருஷ்ணன் பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், புதுப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபன் தலைமையிலான காவல் துறையினர் கிருஷ்ணனை கைதுசெய்ய அங்கு சென்றனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணன் தப்ப முயன்றதால், அவரை மடக்கிப் பிடித்தபோது எதிர்பாராதவிதமாக கொலையாளி கிருஷ்ணன் உதவி ஆய்வாளர் தீபனை நோக்கி சரமாரியாக அரிவாளால் வெட்டத் தொடங்கியதில் தீபன் படுகாயமடைந்தார்.
பின்னர் உதவி ஆய்வாளர் தீபன் தற்காப்புக்காக கிருஷ்ணனை துப்பாக்கியால் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, டிஐஜி எழில் அரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ், துணைக் கண்காணிப்பாளர் பாபு பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கடலூரில் ரவுடியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலையை வெட்டி தூக்கிச் சென்ற கும்பல்!