கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் நெய்வேலி பகுதியில் திறந்தவெளியில் சுரங்கங்கள் அமைத்து, அதில் ராட்சத இயந்திரங்கள் மூலம் நிலக்கரியைத் தோண்டி எடுத்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மணிக்கு 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், புதிய அனல் மின்நிலையம் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. இரண்டு அலகுகளைக் கொண்ட இந்த அனல் மின்நிலையத்தில் ஒரு அலகில் பணி முடிவடைந்து மணிக்கு 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. மற்றொரு அலகில் மணிக்கு 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் அலகில் நிலக்கரியை எரிப்பதற்காக பர்னஸ் ஆயில்(எரிபொருள்) பயன்படுத்தப்படுகிறது.
இந்த பர்னஸ் ஆயில், சென்னை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி மூலம் நெய்வேலிக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் டேங்கர் லாரியில் பர்னஸ் ஆயிலுக்குப் பதிலாக தண்ணீர் கலந்து கொண்டு வருவதாக என்.எல்.சி. அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க:காரின் உரிமையாளரே அவரது காரை திடுடிய சம்பவம்...! ஏன் தெரியுமா?
அதன்படி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பர்னஸ் ஆயில் ஏற்றிக்கொண்டு புதிய அனல் மின்நிலையத்துக்கு வந்த டேங்கர் லாரியை வழிமறித்த என்.எல்.சி. இளநிலை பொறியாளர் சவுந்தர்ராஜன் தலைமையிலான அலுவலர்கள் சோதனை செய்தனர். நான்கு பிரிவுகள் கொண்ட அந்த லாரியில் இரண்டு பிரிவுகளில் பர்னஸ் ஆயிலும், மற்ற இரண்டு பிரிவுகளில் தண்ணீரும் இருப்பது தெரியவந்தது. இதை பார்த்து அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து இளநிலை பொறியாளர் சவுந்தர்ராஜன், தெர்மல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் தமிழ்செல்வன் (36), கிளீனரான வீமராஜ் என்பவரின் மகன் அஜித்குமார்(25) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், டிரைவரும், கிளனரும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் லிட்டர் பர்னஸ் ஆயிலை டேங்கர் லாரியில் ஏற்றிக்கொண்டு நெய்வேலிக்கு புறப்பட்டதும், வரும் வழியில் 10 ஆயிரம் லிட்டர் பர்னஸ் ஆயிலை விற்றதும், அதற்குப் பதிலாக 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை டேங்கர் லாரியில் நிரப்பி மோசடி செய்ததும் தெரியவந்தது. 10 ஆயிரம் லிட்டர் பர்னஸ் ஆயிலின் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்த இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.