என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி கடலூர்:நெய்வேலியில் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. மின்சார உற்பத்தி செய்து வரும் நிலையில், இந்த நிறுவனம் தென்னிந்தியாவில் மின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில், இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டு காலம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், என்எல்சி இந்தியா நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்யப்படும் வரை 50,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்றும்,
மேலும் என்எல்சிக்கு நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் ஜீவ ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது வழங்கப்பட்டு பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற நிலையிலும், இதற்கு எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்தனர். இந்நிலையில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களுடன் நேற்று மாலை கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியர் பூமா மற்றும் காவல் துறை அதிகாரிகளும், என்எல்சி அதிகாரிகள், ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் என நான்கு தரப்பினர் கலந்து கொண்டனர்.
மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் என்எல்சியில் இருந்து கலந்து கொண்ட அதிகாரிகள் ஒரு முடிவு எடுக்கக்கூடிய அதிகாரிகளாக இல்லை என்ற காரணத்தினால், இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து பேசி வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பொதுச்செயலாளர் சேகர் கூறுகையில், இன்று (ஜூலை 15) இரவு திட்டமிட்டபடி வேலை நிறுத்த அறிவிப்பு கூட்டம் என்எல்சி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் எனவும், இந்த கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியாகும்” எனவும் தெரிவித்தார். இதற்குள்ளாக என்எல்சி நிர்வாகம் ஒரு முடிவு எடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என ஜீவா ஒப்பந்த தொழில் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:திமுக எம்எல்ஏ ஐய்யப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு!