நெய்வேலி அனல்மின் நிலையத்தில் இன்று கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தியாவில், இதுபோன்ற கொதிகலன் விபத்துகள் அவ்வப்போது ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுத்தினாலும், இதைத் தவிர்ப்பதற்கு அரசு ஆக்கப்பூர்வமான செயல்கள் எதையும் முன்னெடுத்ததுபோல் தெரியவில்லை.
இந்தியாவில் நடைபெற்ற கொதிகலன் விபத்துகள்
குஜராத் மாநிலம் சூரத்தில் துணிகளுக்கு சாயமிடும் தொழிற்சாலையில் ஜூன் 8ஆம் தேதி கொதிகலனின் குழாய் வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர். ஜூன் 19ஆம் தேதி லக்னோவில் வேதியியல் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கொதிகலன் விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். குஜராத்தில் தேகேஜ் பகுதியிலுள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததோடு 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2017ஆம் ஆண்டு நவம்பரம் மாதம் பேரொஸ் காந்தி அனல் மின்நிலையத்தில் கொதிலன் வெடித்ததில் 43 பேர் உயிரிழந்தனர். இதுபோல, ஓசூரிலுள்ள சிப்காட்டில் ரப்பர் தொழிற்சாலையில் கொதிகலனின் குழாய் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.
தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் தரவுகளின் படி, 2018ஆம் ஆண்டு கொதிகலன்கள் வெடித்து விபத்துக்குள்ளானதில் 51பேர் உயிரிழந்தது தெரியவருகிறது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.
கொதிகலன்களுக்கான ஒழுங்குமுறைகள்
கொதிகலன்கள் பாதுகாப்பாக இயங்குவதையும், கொதிகலன்களால் பொதுமக்களின் உயிர், உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் பாதுகாப்பை உறுதி செய்வதுமே இந்திய கொதிகலன்கள் சட்டம் 1923இன் அடிப்படை நோக்கமாகும்.
அதிகப்படியான அழுத்தம் செலுத்தப்பட்டால் தானாக எச்சரிக்கை எழுப்பும் தொழில்நுட்பம் உள்ள கொதிகலன்களை அமைக்கவேண்டும், அந்த கொதிகலன்கள் பாதுகாப்பனவை தானா என்பதை அவ்வப்போது ஆய்வுக்கும் உட்படுத்தவேண்டும் என தொழிற்துறையின் ஒழுங்குமுறைகள் கூறுகின்றன.
ஆனால், இந்தியாவில் தொழிற்துறையின் ஒழுங்கு முறைகள் வியாபாரத்திற்கு முக்கியத் தடையாகப் பார்க்கப்படுகிறது. ஊழல், அலுவலர்களின் அலட்சியப்போக்கு காரணமாக பாதுகாப்பு சோதனைகள் இருந்தும் தொழிற்சாலைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. இதுவே இதுபோன்ற விபத்துகளுக்கு வழிவகுக்கிறது.
என்.எல்.சியில் கொதிகலன் வெடிப்பது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதம் 7ஆம் தேதியும் இதுபோன்ற விபத்து ஏற்பட்டதில் 8பேர் காயமுற்றனர். கொதிகலன் வெடித்தது குறித்து ஆராய ஆறுபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆராய்ந்து வருங்காலங்களில் கொதிகலன் வெடிவிபத்தை தவிர்க்கும் முடிவுகள் குறித்து அறிக்கை எதைனையும் வெளியிடவில்லை.
என்.எல்.சியில் உள்ள பிரச்னை
புதிய கொதிகலன்களை நிறுவவதில் ஏற்பட்ட தொடர்ச்சியான காலதாமதத்தால், என்.எல்.சியில் பழைய கொதிகலன்களே இயக்கப்பட்டு வந்தன. ஒரு கொதிகலனின் பயன்பாட்டு கால அளவு 25ஆண்டுகள் மட்டுமே. நெய்வேலி என்.எல்.சியில் பயன்படுத்தப்படும் அனைத்து கொதிகலன்களின் பயன்பாட்டுக் கால அளவு முடிந்துவிட்டன.
இன்று வெடித்த கொதிகலன் 26ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 2011-15ஆம் ஆண்டுகளுக்குள்ளேயே இந்தப் பழைய கொதிகலன்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு புதிய கொதிகலன்களை அமைத்திருக்கவேண்டும்.
வருங்காலங்களில் அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்
தொழிற்துறை ஒழுங்குமுறையில் கடுமையான அணுகுமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும். எச்சரிக்கைகளை வழங்கும் கொதிகலன்களை மட்டுமே இயங்க அரசு அனுமதிப்பதோடு, இந்த கொதிகலன்கள் அனைத்தும் முறையாக செயல்படுகின்றதா என்பதையும் அவ்வப்போது ஆய்வுக்குட்படுத்தவேண்டும்.
மேலும், தொழிற்துறை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவேண்டும். கொதிகலன்களில் தரம் குறித்து தொழிற்சாலை வழங்கும் சுய சான்றிதழ், மூன்றாம் தரப்பு சான்றிதழை அரசு கட்டாயமாக்கினால் மட்டுமே இதுபோன்ற விபத்துகள் வருங்காலங்களில் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
இதையும் படிங்க:என்எல்சி விபத்து: தொழலாளர்களின் உயிரிழப்பு வேதனையளிக்கிறது- அமித்ஷா