தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களைவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால், தமிழ்நாடு முழுவதும் அரசியல் தலைவர்களின் பரப்புரை கூட்டம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், இன்று கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ் ரமேஷை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
உதயநிதி ஸ்டாலின், வாகனத்தில் நின்றப்படியே புதுப்பேட்டை பகுதியில் இருந்து பண்ருட்டி நகரம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடாம்புலியூர், சத்திரம், நடுவீரப்பட்டு, பாலூர் நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர பரப்புரை செய்தார்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மோடியின் கீழ் நடக்கும் அடிமை ஆட்சியாக இருக்கிறது. எடப்பாடி ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாகியுள்ளது. இதற்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி. நீட் தேர்வால் நமது தங்கை அனிதாவை இழந்து விட்டோம். அதை நாம் மறக்க கூடாது. ஈபிஎஸ் ஓபிஎஸ்-சை டயர் நக்கி என்று கூறிய அன்புமணி ராமதாஸ்தான், தற்போது அந்த கூட்டணியில் சேர்ந்து டயர் நக்கி கொண்டிருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை செய்யக் கூடியவர். கண்டிப்பாக நீட் தேர்வை ரத்து செய்வார். மக்களின் வில்லனாக இருக்கும் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். எடப்பாடி அரசு தங்களது சுயலாபத்திற்காக தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அடமானம் வைத்து கூட்டணி அமைத்து உள்ளது. மக்கள் எல்லாம் சிந்தித்து தங்கள் வாக்களிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.