கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களை சித்தா முறையில் சிகிச்சை வழங்க 150 படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை மையத்தை ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் எம்.சி. சம்பத், "பெரியார் அரசு கல்லூரியில் 150 படுக்கை வசதியுடன் முழுக்க சித்த மருத்துவ முறையில் கரோனாவுக்கு சிகிச்சையளிக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. தகுந்த இடைவெளியுடன் படுக்கை வசதிகள், கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை பெறுவோருக்கு தேவையான சோப்பு, சீப்பு, துண்டு, போர்வை போன்ற அனைத்து அத்தியாவசிய பொருள்களும் வழங்கப்படும். மேலும், சித்த மருத்துவ முறையில் நடைபயிற்சி, மூச்சுப்பயிற்சி, கபசுரக் குடிநீர், மூலிகை சிற்றுண்டி, வேது பிடித்தல், நோய் காப்பு சித்த உணவுகள், மிளகு சாதம், உளுந்து சாதம், வாழைப்பூ பொறியல், மோர்சாதமுடன் ஐங்காயப்பொடி சீரகத் தண்ணீர், நெல்லிக்காய் சாதம், காய்கறி கூட்டாஞ்சோறு, எலுமிச்சை இஞ்சி ரசம், மொச்சை, பீன்ஸ் பொரியல் மணத்தக்காளி கூட்டு, தூதுவளை போன்ற உணவுகள் வழங்கப்பட்டு குறுகிய நாட்களில் நோய் தொற்று சரிசெய்யப்பட்டு நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.