கடலூர்:வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்ட கடல் அலை தற்பொழுது ஐந்து முதல் 8 அடி உயரத்திற்கு எழுந்து வருகின்றது.
கொந்தளிப்பாக காணப்படும் கடலால் மீனவர்கள் அச்சத்தில் அடைந்துள்ளனர். ஆனால், இதுவரை புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படவில்லை என தாழங்குடா மீனவர்கள் வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மீனவர் கர்ணா கூறுகையில், “கடலூர் தாழங்குடா பகுதிகளில் உள்ள கரைகளில் படகுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் படகுகள் கடலில் அடித்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.