'மிக பெரிய தோல்வியை சந்தித்து விட்டார் மோடி' - கே.எஸ். அழகிரி - bjp
கடலூர்: "பல்வேறு துறைகளிலும் ஒரு தெளிவான சிந்தனை இல்லாமல் செயல்பட்டதால் மிக பெரிய தோல்வியை தழுவியுள்ளார் பிரதமர் மோடி" என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
கடலூரில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் திமுக தலைமையில் அமைக்கப்பட உள்ள கூட்டணி ஒரு மதச்சார்பற்ற திராவிட கூட்டணியாக அமைய உள்ளது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதே இந்த கொள்கை ரீதியான அணியின் நோக்கம். ஜப்பான், சிங்கப்பூர் போன்ற தொழில் கொள்கையை இங்கும் உருவாக்கிட வேண்டும். ரஃபேல் விவகாரத்தில் தவறு நடந்திருப்பதை மத்தியில் ஆளும் மோடி அரசு மூடி மறைக்க முயற்சித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, பிரதமரோ, நிர்மலா சீதாராமனோ யாருமே பதிலளிக்கவில்லை. பொருளாதாரத் துறை, சமூகத் துறை, விவசாயத் துறை, தொழில் துறை ஆகிய பல்வேறு துறைகளில் மோடிக்கு தெளிவான சிந்தனை என்பதே இல்லை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றில் தெளிவான சிந்தனை இல்லாமல் மிகப்பெரிய தோல்வியை தழுவினார் பிரதமர்" என்று தெரிவித்தார்.