விருத்தாசலம் அருகிலுள்ள கருவேப்பிலங்குறிச்சியில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவி திலகவதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரை ஒரு தலையாக காதலித்த அவருடன் பள்ளியில் படித்த ஆகாஸ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், திலகவதி கொலையை கண்டித்து பாமக சார்பில் இன்று கருவேப்பிலங்குறிச்சியில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே.மணி, விருத்தாசலம் அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் உள்ள திலகவதி உடலை பார்வையிட்டு கருவேப்பிலங்குறிச்சிக்கு சென்று திலகவதியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சாலையில் பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் பாமக மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் டாக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.