ஒரு மாவட்டத்தில் தேர்தல் நடக்கும்போது ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் பிரச்னை எதுவும் ஏற்பட்டால், அந்த வாக்குச் சாவடியின் பொறுப்பாளர் என்பதை தெரிந்துகொள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புத்தகத்தைப் புரட்டி பார்க்க வேண்டும். இந்தப் புத்தகத்தை எல்லோரும் கையில் எடுத்துச் செல்ல முடியாது.
கடலுார் மாவட்டத்தில் ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடலுார், சிதம்பரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியை உள்ளடக்கிய இம்மாவட்டத்தில் 1,183 இடங்களில் 2,301 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல் பணியில் 15 ஆயிரம் பேர் வரையில் ஈடுபடும் நிலையில், அவர்களைத் தொடர்பு கொள்வது என்பது காவல் துறைக்கும், வருவாய்த் துறைக்கும் சவாலான விஷயமாகும்.
இதனை மாற்றியமைக்கும் முயற்சியில் கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஈடுபட்டார். இதற்காக, வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களில் நேரடியாக ஆட்களை நியமித்து, அதன் அட்ச, தீர்க்க ரேகையுடன் இடங்களைப் பதிவுசெய்ய வைத்தார். பின்னர், எக்ஸ்கான் இன்போ டெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து நாடாளுமன்றத் தொகுதி, அதில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி மையங்கள் பகுக்கப்பட்டன.