கடலூர்:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (நவ.13) இரவு முதல் மிதமான மழை பரவலாக பெய்து வருகிறது.
கனமழை காரணமாக கடலூர் லாரன்ஸ் சாலை, செம்மண்டலம், மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். அதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகப்படியாக சிதம்பரத்தில் காலை 8.30 மணி அளவில் 10 சென்டி மீட்டர் மழையும், காட்டுமன்னார்கோயிலில் 9.8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, மழையை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க:பட்டாசு வெடித்த இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது.. ஆவடி போலீசார் அதிரடி!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழை தொடர்பான எந்த ஒரு புகாரையும் 1077 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 8.30 மணி அளவில் கடலூர் மாவட்டத்தில் 12.3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, சிதம்பரம் 10 சென்டி மீட்டர், பரங்கிப்பேட்டை 12 சென்டி மீட்டர், காட்டுமன்னார்கோயில், வானமாதேவி, கொத்தவாச்சேரி 9 சென்டிமீட்டர் மற்றும் புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், வடக்குத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குடிதாங்கி லால்பேட்டை ஆகிய பகுதிகளில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் வேப்பூர் 7 சென்டிமீட்டர், அண்ணாமலை நகர் 6.8 சென்டிமீட்டர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் 5.7 சென்டிமீட்டர், குப்பநத்தம் 5.5 சென்டிமீட்டர், விருத்தாச்சலம், மாத்தூர், காட்டு மயிலூர் ஆகிய பகுதிகளில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இதையும் படிங்க:இனி வியாழக்கிழமைகளிலும் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை.. எப்போது வரை தெரியுமா?