தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை - நலிவடைந்துவரும் கைத்தறி நெசவுத்தொழில்

கடலூர்: நலிவடைந்துவரும் கைத்தறி நெசவுத்தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Handloom workers
Handloom workers

By

Published : Feb 22, 2020, 5:13 PM IST

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் அயன்குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, கு. நெல்லிக்குப்பம், மேட்டுக்குப்பம், வரதராஜன்பேட்டை, வெங்கடாம்பேட்டை, கோ. சத்திரம், அரங்கமங்கலம், ராசாக்குப்பம், வளையல்கார மேட்டுகுப்பம், எல்லப்பன்பேட்டை, விருப்பாட்சி, சித்தாலிக்குப்பம், ஆடூர்அகரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைத்தறி நெசவுத் தொழில் நடந்துவருகிறது. இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்தனர்.

குறிஞ்சிப்பாடி லுங்கி என்றால் மிகவும் பிரபலம். உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரையில் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தது. குறிப்பாக சிங்கப்பூரி நெசவாளர் சங்கம், மீனாட்சிப்பேட்டை நெசவாளர் சங்கம், திருவள்ளுவர் கூட்டுறவு சங்கம் என பல்வேறு சங்கங்களில் ஏழை, எளிய மக்கள் பயனடைந்துவந்தனர்.

ஆனால் தற்போது கைத்தறி நெசவுத்தொழில் மிகவும் நலிவடைந்தும், பொருளாதாரத்தில் பின்னடைவையும் சந்தித்துவருகின்றனர். தற்போது 500-க்கும் குறைவானவர்களே நெசவுத்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கைத்தறி நெசவுத்தொழில் செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இது குறித்து செல்வராஜ் (75) என்பவர் கூறுகையில், "பாரம்பரியம் மிக்க நெசவுத் தொழிலுக்கு மிகப்பெரிய அளவுக்கு திறன் இருந்தாலும் சமகாலத்தில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. குறிஞ்சிப்பாடி பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் தொழிலாக நெசவுத் தொழில் இருந்தது.

குறிஞ்சிப்பாடியில் மட்டும் மூன்றாயிரம் தறி இருந்தது. தறிக்கு மூன்று பேர் என சுமார் ஒன்பது ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுவந்தனர்.

ஆனால் தற்போது நூறு தறி மட்டுமே உள்ளது. தறிக்கு ஒருவர் மட்டுமே நெய்கின்றனர். அச்சு புனைவது, நார் சுற்றுவது, நூல் இழைப்பது, அள்ளு பிடிப்பது என ஒரு கைலி நெய்வதற்கு ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ஆள் தேவை. ஆனால் தற்போது அனைத்து வேலைகளையும் ஒருவர் மட்டுமே செய்வதால் உற்பத்தி குறைகிறது.

இதற்குக் காரணம் கூலி என்பது மிகவும் குறைவு. வெளியில் கூலி வேலைக்குப்போனால்கூட 500 ரூபாய் சம்பளமாக கொடுக்கிறார்கள். ஆனால் நெசவுத் தொழிலில் 100 ரூபாய் கிடைப்பதே கடினம்.

மேலும் மூலப்பொருள்கள் கிடைப்பதில் சிக்கல், வேலையாள்களின் இடப்பெயர்வு, போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாதது போன்றவை பாரம்பரிய நெசவுத்தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளில் இந்தத் தொழிலைவிட்டு ஏராளமான மக்கள் வெளியேறியுள்ளனர்.

பல்வேறு நிறுவனங்களுக்கு தினக்கூலிகளாகச் செல்கின்றனர். நெசவுத்தொழில் செய்துவந்தவர்கள் அத்தொழிலை விட்டுவிட்டு, வேறு தொழிலுக்குச் செல்கின்றனர். இப்போது தறி நெய்வதற்கு ஆள் கிடைப்பதில்லை. ஜவுளி உரிமையாளர்கள் விசைத்தறியை நோக்கிச் சென்றுவிட்டனர்.

எங்களின் அடையாளத்தை இழக்கக்கூடாது என்பதற்காக தொடர்ந்து நெய்துவருகிறோம். அரசு நிதியுதவி அளித்தால்தான் நெசவுத் தொழிலைக் காப்பாற்ற முடியம். கைத்தறி நெசவாளர் துறைகள் மூலமாக நிதியுதவி அளித்தால் எங்களை வந்து சேராது. அதனால் நேரடியாகத் தொழிலாளர்கள் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை - நலிவடைந்துவரும் கைத்தறி நெசவுத் தொழில்

உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காததாலும், நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டதாலும் நெய்து தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்த முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் நெசவாளர்கள்.

இதையும் படிங்க: மாணவர்களின் நேர்மைப் பண்பை வளர்க்க 'நேர்மை அங்காடி' திறப்பு

ABOUT THE AUTHOR

...view details