சென்னை: கடலூர் மாவட்டம் கருங்குழி பஞ்சாயத்து தொடக்க பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த தண்டபாணி, 2000ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகள் சுந்தரி, தனது சகோதரிகளின் அனுமதியைப் பெற்று, கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி 2001ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் நீண்ட நாள்களுக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
'சகோதரிகளின் கணவர்கள் அரசு வேலையில் இருந்தால் பெண்ணுக்கு அரசு வேலை கிடையாதா' - நீதிமன்றம் - பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை
சகோதரிகளின் கணவர்கள் அரசு வேலையில் இருப்பதை காரணமாகக் கூறி, பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி, சுந்தரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், "மனுதாரரின் மூன்று சகோதரிகளின் கணவர்களும் அரசு வேலையில் இருப்பது மட்டுமல்லாமல் மனுதாரரின் கணவரும் அரசு பணியில் தற்காலிகமாக இருப்பதால் அவரது குடும்பம் ஏழ்மை நிலையில் இல்லை. அவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது".
பணி வழங்க உத்தரவு:அரசுத்தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கருணை அடிப்படையில் வேலை கோரி மனு அளித்த போது, மனுதாரருக்கு திருமணமாகவில்லை எனவும் திருமணம் ஆன பின்னர் அதனை காரணம் காட்டி மனுவை நிராகரித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. மனுதாரரின் சகோதரிகளின் கணவர்கள் அரசு வேலையில் இருப்பதால் அவர்கள் மனுதாரரை கவனித்து கொள்வார்கள் என கூறுவது சரியானது அல்ல. மனுதாரரின் கணவர் தற்காலிக ஊழியராக கடைநிலை பணியாளராக பணியாற்றி வரும் நிலையில், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது. அவரது தகுதிக்கு ஏற்ற வகையிலான பணியை நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டிற்கு விடியல் வந்ததா ? நீட் முதல் திராவிட மாடல் வரை என்ன செய்தார் ஸ்டாலின்...?