விபத்தில் உருக்குலைந்த கார் கடலூர்:காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூர், இந்து காலணி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட கிருஷ்ணன் மகன் விஜயராகவன் (வயது 41), இவர் TN 22 DF 1249 என்ற எண் கொண்ட பியட் காரில் அவரது மனைவி வத்சலா, தாயார் வசந்தலட்சுமி, மகன்கள் விஷ்ணு, அதீர்த் ஆகிய ஐந்து பேரும் கேரளாவில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் நங்கநல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
வேப்பூர் அருகே உள்ள அய்யனார்பாளையம் மஞ்சயப்பர் கோயில் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் விஜயராகவன் தனது காரை நிறுத்தினார்.
அப்போது சில நிமிடங்களில் காருக்கு பின்னால் வந்துக் கொண்டிருந்த சரக்கு லாரி அதிவேகமாக விஜயராகவனின் கார் மீது மோதியது. இதில் இரு லாரிகளுக்கு இடையில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் நசுங்கி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலிசார், தீயணைப்பு வீரர்கள் திட்டக்குடி டிஎஸ்பி, காவ்யா மேற்பார்வையில் சம்பவ இடத்திற்குச் சென்று இடிபாடுகளில் சிக்கி இறந்த ஐந்து பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இரண்டு லாரி, இரண்டு கார்கள், ஒரு தனியார் பேருந்து என ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் திருச்சி சென்னை சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மதுபோதையில் பாம்பை பிடித்த நபர் - கடித்து உயிரைப் பறித்த பாம்பு!