சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நேற்று முன்தினம் (ஜூன் 18) 108 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு மிரட்டல்விடுத்தார்.
இது குறித்து, தேனாம்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வெடிகுண்டு வல்லுநர்களுடன் ரஜினிகாந்தின் வீட்டுக்குச் சோதனையிடச் சென்றனர்.
ஆனால் கரோனா தொற்று காரணமாக ரஜினிகாந்தின் வீட்டில் வல்லுநர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர், ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனால் மிரட்டல்விடுத்த நபரின் எண்ணை வைத்து அவரை தேனாம்பேட்டை காவல் துறையினர் தேடிவந்தனர். அந்த எண் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதி என்று கண்டுபிடிக்கப்பட்டு கடலூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற காவல் துறையினர், வெடிகுண்டு மிரட்டல்விடுத்தது மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.