கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்த ஆழிச்சகுடி கிராமத்தில் கலியமூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் ஒரு தரப்பாகவும், பன்னீர்செல்வம், அன்பழகன், ராகவன், நடராஜன் ஒரு தரப்பாகவும் இருந்துள்ளனர். உறவினர்களான இவர்கள் அனைவரும் முன் விரோதம் காரணமாக கோவில் திருவிழா உட்பட பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் எதிர் எதிராக இருந்து வந்து உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு கலியமூர்த்தி, ரவிச்சந்திரன் இருவரும் அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் இறந்து கிடந்துள்ளனர். அந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புவனகிரி காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பெயரில் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இறந்து போன கலியமூர்த்தியின் மகன் சாரங்கபாணி, 2007ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய தந்தை கொலை செய்யப்பட்டு இறந்துள்ளதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடலூர் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.