குடிபோதையில் நடுரோட்டில் ரவுண்ட் அடித்து அலப்பறை.. இளைஞரைத் தூக்கிய போலீசார்! கடலூர்: சிதம்பரம் வண்டி கேட் பகுதி சாலையில் இன்று காலை (நவ.14) அவ்வழியாக வந்த லாரியை மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் வழிமறித்து, கண்ணாடியை உடைத்து அலப்பறை செய்துள்ளார். பின் அவ்வழியாகச் செல்லும் வாகனங்களை மறிப்பதும், வாகனம் ஓட்டுபவர்களை அடிக்கச் செல்வதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
இந்நிலையில், குடிபோதையில் நடுரோட்டில் பிரச்னையில் ஈடுபட்ட இளைஞரைப் பற்றி அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வந்து பார்க்கையில், அந்த இளைஞர் சாலையோரமாக யாரோ அடித்துப் போட்டது போல கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக அந்த இளைஞரை, காவல் நிலையத்திற்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லலாம் என நினைத்த நேரத்தில், அந்த இளைஞர் திடீரென எழுந்து போதையில் “என்னை யாரோ கொல்ல வருகிறார்கள். நான் உடைக்கவில்லை” என்று உளறிக் கொண்டே பின் பக்கமாக நடந்தவாறு சென்றுள்ளார்.
இளைஞரிடம் சாதுவாக பேசிக் கொண்டே அவரை ஆட்டோவில் அழைத்துச் செல்ல காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்ட நிலையில், சிறிது நேர போரட்டத்திற்கு பின் இளைஞரை சாமர்த்தியமாக ஆட்டோவில் ஏற்றினர். ஆனால், அந்த இளைஞரோ, அதைவிட சாமர்த்தியமாக செயல்பட்டு, ஆட்டோவில் இருந்து மிக லாவகமாக நழுவி சாலையில் இறங்கியுள்ளார்.
பின்னர், மீண்டும் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளை குறுக்கே சென்று தடுப்பதும், அவர்களை அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு மேலும் சென்றால் விபரீதம் ஆகிவிடும் என போலீசார் அவரைத் தடுத்துள்ளனர். அப்போதும் அவர், “ நான் வாகனங்களை உடைக்கவில்லை, என்னை கொல்ல வருகிறார்கள்” என்று சொன்னதையே மீண்டும் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.
இந்நிலையில், அக்கம் பக்கதினரிடம் போலீசார் விசாரிக்கையில், அந்த நபர் அஜித்குமார் என்பதும், அவர் சிதம்பரம் அருகே உள்ள சேதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளாது. பின்னர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் போலீசார் அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர். பின் அவரை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் தொடர்ந்து அரங்கேறி வரும் திருட்டு சம்பவம்.. பொதுமக்கள் அச்சம்!