கடலூர்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டத்திலுள்ள பாதிரிகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் பங்கேற்று அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், வருடத்திற்கு நான்கு முறை கிராமசபை கூட்டம் நடத்தப்படவேண்டும்.
ஆனால், அதிமுக ஆட்சியல் கிராமசபை கூட்டத்தை நடத்தவில்லை. எனவே, எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக கிராமசபை கூட்டத்தை நடத்திவருகிறது. கிராமசபை கூட்டத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிமுக அரசு அச்சமடைந்து கிராமசபை கூட்டம் நடத்த தடை விதித்தது. எனவே, திமுக மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்திவருகிறது.
கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் கருணாநிதி ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்பில் 30 விழுக்காடு ஒதுக்கீடு. உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 விழுக்காடு பணியிடங்கள், ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி போன்ற நலத்திட்டங்களை அறிவித்தார். பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த மகளிர் சுய உதவிக்குழு 1989ஆம் ஆண்டு தருமபுரியில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.
அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நான் அனைத்து மாவட்டங்களிலும் பல மணி நேரங்கள் நின்றுகொண்டே அனைவருக்கும் சுழல் நிதியையும், மானியங்களையும் வழங்கினேன். உள்ளாட்சித் துறைக்கு அமைச்சராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமியை தாண்டி ஊழல் செய்துவருகிறார். அவர், எஸ்.பி. வேலுமணியல்ல ஊழல் மணி" என்றார்.
இதையும் படிங்க:அமைச்சர்கள் கிடைப்பதை கொள்ளையடிக்கின்றனர்- ஸ்டாலின்